தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 15ல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு
நவம்பர் 15 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று தமிழ்நாட்டில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 9 சென்டிமீட்டர் மழையும், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் நகர பகுதியில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.