உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்ட 15 வயது சிறுவன் - கின்னஸ் சாதனை
உலகம் முழுவதுமுள்ள மக்கள் ஏதேனும் ஓர் வினோத செயல்களை செய்து கின்னஸ் சாதனை செய்து வருவதை அண்மைக்காலமாக நாம் பார்த்து வருகிறோம். அதுபோல் இந்திய நாட்டின் சீக்கிய மதத்தினை சேர்ந்த 15 வயது சிறுவன் செய்துள்ள கின்னஸ் சாதனை குறித்து தான் நாம் இந்த செய்தி குறிப்பில் காணவுள்ளோம். உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டா நகரினை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (15). இவர் தனது சிறுவயதிலிருந்தே தலை முடியினை வெட்டியதே இல்லையாம். பின்னர் வளரவளர சாஹல் தனது முடியினை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். இதுகுறித்து சாஹல் கூறுகையில், "சீக்கிய மதத்தில் தலைமுடியை பராமரிப்பது அடிப்படை கொள்கைகளில் ஒன்று. இதனை கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக நான் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
146 சென்டிமீட்டர் நீளம் கொண்ட தலைமுடி
இவரின் தலைமுடி தற்போது 146 சென்டிமீட்டர்(4 அடி 9.5 அங்குலம்) நீளத்திற்கு வளர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவரின் இந்த நீண்ட தலைமுடியானது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து அந்த சிறுவன் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளார். மேலும் அவர், தனது தலைமுடி மிக நீளமாகவும் அடர்த்தியாகவும் உள்ளது என்று மற்றவர்கள் கூறுகிறார்கள் என்றும், இதேபோல் தங்களுக்கும் முடி வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். தனது முடியினை அலச 20 நிமிடமும், அதனை உலரவைக்க அரைமணிநேரமும் ஆகிறது என்று சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.