மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுவதாகப் போலிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் அட்டவணை எப்போதும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பரப்பப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. பொதுத் தேர்தலுக்கான முழு அட்டவணையையும் போலி செய்தியாக வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டு மார்ச் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்படும் என போலி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, மார்ச் 28 என்றும், வாக்குப்பதிவு தேதி ஏப்ரல் 19 என்றும், முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் மே 22 என்றும் போலி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
'வாட்ஸ்அப் செய்தி பொய்யானது': தேர்தல் ஆணையம்
வாட்ஸ்அப் குழுக்களில் தேர்தல் ஆணையத்தின் லெட்டர்ஹெட்டுடன் போலியான செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொதுத் தேர்தலை எப்படி ஒரே கட்டமாக நடத்த முடியும் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த குழப்பத்திற்கு மத்தியில், வைரலான செய்தி போலியானது என தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்துள்ளது. "மக்களவைத் தேர்தல் 2024க்கான அட்டவணை தொடர்பாக Whats app-ல் ஒரு போலி செய்தி பகிரப்படுகிறது. அந்த செய்தி பொய்யானது. ECIஆல் இதுவரை எந்த தேதியும் அறிவிக்கப்படவில்லை" என்று ட்விட்டரில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.