நீட் தேர்வை எதிர்த்து நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது AISA
மருத்துவச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்(நீட்) நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து இடதுசாரி மாணவர் அமைப்புகள் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. சமீபத்தில் நீட் தேர்வு எழுதிய 67 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த அதிக மதிப்பெண் பெற்றவர்களில் சிலர் ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே, நீட் தேர்வு தாள் கசிந்திருக்கலாம் அல்லது மோசடி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், சில மாணவர்களுக்கு அதிகமான கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஜூன் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம்
எனவே, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின்(என்டிஏ) ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூன் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அகில இந்திய மாணவர் சங்கம்(ஏஐஎஸ்ஏ) வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மவுனம் காத்து வருவதாக AISA டெல்லி மாநில செயலாளர் நேஹா குற்றம் சாட்டினார். மேலும், புது டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நீட் தேர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கவலைகளை தெரிவித்தனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் துயரங்களை எடுத்துரைத்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக(JNU) மாணவர் சங்கத் தலைவர் தனஞ்சய், என்டிஏவுக்கு கண்டனம் தெரிவித்தார்.