அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை
சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தின் கண் மருந்துகளால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்(CDC) குற்றம்சாட்டி இருந்தது. இதையடுத்து, நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டாளர் மற்றும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், மேற்கண்ட நிறுவனத்தில் நேற்று(பிப் 3) நள்ளிரவு சோதனை நடத்தினர். 55 அமெரிக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய மருந்துகளைத் தயாரித்த இந்த மருந்து நிறுவனம், சென்னைக்கு தெற்கே சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் எஸ்ரிகேர் என்ற சொட்டுமருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவுகளை அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து, இந்த நிறுவனம், அமெரிக்க சந்தைகளில் இருக்கும் அதன் கண் மருந்துகளை தானாக முன் வந்து திரும்ப பெற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்தது.
இரவு 2 மணி வரை நடந்த விசாரணை
"அமெரிக்காவிற்கு அனுப்பிய மருந்துகளில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து வரும் திறக்கப்படாத மாதிரிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கான முதற்கட்ட அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது" என்று தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் பி.வி.விஜயலட்சுமி NDTVஇடம் கூறியுள்ளார். அதிகாலை 2 மணிக்கு விசாரணை முடிவடைந்தது. இப்போதைக்கு கண் மருந்து தயாரிப்பை நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், நிறுவனத்தின் ஆலைக்கு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான உரிமம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என்று விஜயலட்சுமி தெரிவித்திருக்கிறார். இந்த மருந்துகளால், இதுவரை அமெரிக்காவில் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 11 பேர் பார்வை இழந்துள்ளனர் என்றும் 1 உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் CDC தெரிவித்துள்ளது.