
திருச்செந்தூர் முருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செய்தி முன்னோட்டம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் அருள் நிலையமாக விளங்கும் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் திரண்டனர். அவர்களுக்காக கடற்கரையிலுள்ள பகுதி மட்டுமே திறந்து விடப்பட்டிருந்தது. கோவிலுக்குள் நேற்று மதியம் 12 மணிக்குப் பிறகு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக கடந்த ஜூன் 26 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. ஜூலை 1 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட யாகசாலையில் 71 ஹோமகுண்டங்கள், 700 கும்பங்கள் மற்றும் 96 வகை மூலிகைகள் பயன்படுத்தப்பட்டன.
கும்பாபிஷேகம்
'அரோகரா' கோஷத்துடன் நடந்த கும்பாபிஷேகம்
இன்று அதிகாலை 4 மணி அளவில் 12-ம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் மகா தீபாராதனையின் பின்னர், புனித நீர் நிறைந்த கும்பங்கள் கோவில் விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் காலை 6.30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது. இந்த நேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண நகர் முழுவதும் 70 பெரிய LED திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா நிறைவில், 20 ட்ரோன்கள் மூலம் புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. இவ்விழாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 6,100 காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். திருச்செந்தூர் முழுவதும் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற பக்திகளின் கோஷம் பரவி பரவசத்தை ஏற்படுத்தியது.