
2018 குன்றத்தூர் குழந்தை கொலை வழக்கில் தாய் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை வழங்கியது நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
2018 ஆம் ஆண்டு கள்ளக் காதலுக்காக பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாயிற்கு எதிராக நடந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2018 குன்றத்தூர் குழந்தை கொலை வழக்கில் தாயான அபிராமி குற்றவாளி என்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூரில் உள்ள தங்கள் வீட்டில் அஜய் (7) மற்றும் கருணிகா (4) ஆகிய இரண்டு இளம் குழந்தைகள் விஷம் குடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்காகும். தனியார் வங்கியில் ஊழியராக இருக்கும் அவர்களின் தந்தை விஜய், இரவு வேலை செய்துவிட்டு வீடு திரும்பினார். வீடு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
இறப்பு
வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்த குழந்தைகள்
உள்ளே நுழைந்தபோது, இரண்டு குழந்தைகளும் வாயில் நுரையுடன் இறந்து கிடப்பதைக் கண்டார். ஆனால், அவரது மனைவி அபிராமி அங்கு காணவில்லை. பிரியாணி கடை நடத்தி வந்த மீனாட்சி சுந்தரத்துடன் ஏற்பட்ட திருமணத்திற்குப் புறம்பான உறவால், தனது சொந்தக் குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, பின்னர் தனது கள்ளக்காதலனுடன் அபிராமி தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை முடிவில் அபிராமிக்கு தற்போது சாகும் வரை சிறையில் இருக்கும்படியான வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக் காதலுக்காக ஒரு தாய் தனது சொந்தக் குழந்தைகளைக் கொன்றது தொடர்பான இந்த துயர வழக்கில், தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது நீண்ட சட்டப் போராட்டத்தின் முடிவைக் குறிக்கிறது.