கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள்
தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் மொத்தம் 9 பேர் பலியான நிலையில், 15 பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, பட்டாசு குடோன் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்ததால் அருகிலிருந்த 5 கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் மத்திய அரசு வெடிப்பொருள் கட்டுப்பாடு துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தடையங்களை சேகரித்த மத்திய அதிகாரிகள்
மேலும், அப்பகுதிகளில் உள்ள தடையங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. முன்னதாக, நேற்று நடந்த இந்த வெடி விபத்து நாடு முழுவதுமே அதிர்ச்சியினை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்தனர். தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று(ஜூலை.,30) இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின் பேட்டியளித்த அவர், "தடயவியல் நிபுணர்கள் கொண்டு ஆய்வு நடத்தியதில் சிலிண்டர் கசிவின் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளது" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.