பட்டாசு ஆலை விபத்துக்கு சிலிண்டர் விபத்தே காரணம் - அமைச்சர் சக்கரபாணி
தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் மொத்தம் 9 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50,000 பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார். அதேபோல், தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று(ஜூலை.,30) இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் இது குறித்து தம்மிடம் கேட்டறிந்ததாக அமைச்சர் தகவல்
மேலும் அவர்களுக்கு நிவாரண உதவித்தொகையையும் வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நேற்று சம்பவயிடத்தில் தடயவியல் நிபுணர்கள் கொண்டு ஆய்வு நடத்தியதில் சிலிண்டர் கசிவின் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது" என்று கூறினார். இது எதிர்பாரா விபத்து என்றாலும், மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோரை அழைத்து, பட்டாசு ஆலைகள் குடியிருப்புப்பகுதிகளில் உள்ளதா?இல்லை புறநகர் பகுதிகளில் செயல்படுகிறதா?என்று ஆய்வு நடத்த வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, தமிழக முதல்வர் இது குறித்து தம்மிடம் கேட்டறிந்ததாகவும், இவ்விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல் இனி உரிமம் வழங்கிய பின்னர் பட்டாசு ஆலை எவ்வாறு செயல்படுகிறது என்பதை தொடர் ஆய்வு செய்வது அவசியம் என வலியுறுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.