ராணுவ வீரரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர்: இழப்பீடு கோரும் முன்னாள் வீரர்கள்
கிருஷ்ணகிரி அருகே திமுக கவுன்சிலரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரியில் தண்ணீர் தொட்டி அருகே துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் திமுக கவுன்சிலர் மற்றும் பிறரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் சில நாட்களுக்கு முன் நிகழ்ந்தது. பிப்ரவரி 8ஆம் தேதி, போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தொட்டியின் அருகே துணி துவைப்பது தொடர்பாக திமுக உறுப்பினர் சின்னசாமிக்கும் ராணுவ வீரர் பிரபுவுக்கும், இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக கவுன்சிலர் மீது வழக்கு
கவுன்சிலரான சின்னசாமி, அன்று இரவு, 9 பேருடன் சேர்ந்து, பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரபாகரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த பிரபு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்கிழமை(பிப் 14) உயிரிழந்தார். பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசாமி மகன் ராஜபாண்டி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், உயிரிழந்த பிரபுவின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திமுக ஆட்சியில் ராணுவ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்காக பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.