துணி துவைத்ததற்காக ராணுவ வீரர் ஒருவரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர்
கிருஷ்ணகிரியில் தண்ணீர் தொட்டி அருகே துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறில் 33 வயது ராணுவ வீரர் ஒருவர் திமுக கவுன்சிலர் மற்றும் பிறரால் அடித்துக் கொல்லப்பட்டார். பிப்ரவரி 8ஆம் தேதி, போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தொட்டியின் அருகே துணி துவைப்பது தொடர்பாக ராணுவ வீரர் பிரபுவுக்கும், திமுக உறுப்பினர் சின்னசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலரான சின்னசாமி, அன்று இரவு, 9 பேருடன் சேர்ந்து, பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரபாகரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பிரபு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று(பிப் 14) உயிரிழந்தார்.
திமுக கவுன்சிலர் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு
பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசாமி மகன் ராஜபாண்டி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், தாக்குதல் நடந்த நாள் முதல் தலைமறைவாக உள்ள சின்னசாமியை தேடி வருகின்றனர். சின்னசாமி(58), கிருஷ்ணகிரியில் உள்ள போச்சம்பள்ளி தாலுகாவை சேர்ந்த நாகரசம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆவார். சின்னசாமி, குருசூர்யமூர்த்தி (27), குணாநிதி (19), ராஜபாண்டியன் (30), காளியப்பன் (40) மாதையன் (60), மணிகண்டன் (32), வேடியப்பன் (55), , புலிபாண்டி(24), உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி ஆகியோர் சின்னசாமியின் மகன்கள் ஆவர்.