வாக்காளர் அடையாள அட்டையின்றி ஓட்டளிப்பது எப்படி எனத்தெரிந்து கொள்ளுங்கள்
மிசோரம் மற்றும் சத்தீஸ்கரைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் சட்டசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறும். அதேபோல, தமிழ்நாடு அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் முகாம்கள் அங்கங்கே நிறுவப்பட்டுள்ளன. அதில் பெயர் திருத்தும், சேர்க்கை, நீக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரி, ஆனால் வாக்காளர் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியுமா என்பது பலரின் சந்தேகமாக இருக்கலாம்? அதற்கு பதில் ஆம். வாக்களிக்க, வாக்காளர் அடையாளை அட்டை மட்டும் தான் செல்லும் என்ற நிலை தற்போது இல்லை. வேறு எந்த அடையாள சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படும்? எப்படி வாக்களிப்பது? போன்ற உங்கள் சந்தேகங்களுக்கு இங்கே பதில் தெரிந்து கொள்ளுங்கள்.
வாக்களிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்று ஆவணங்களின் பட்டியல்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், வாக்களிக்க பாஸ்போர்ட், ஆதார் அட்டை , பான் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்லலாம். வாக்காளர்களிடம் மேற்கூறிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால், அவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) வெளியிட்ட தேர்தல் சீட்டுகளை எடுத்துச் செல்லலாம். மேலும், MNREGA கார்டுகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர் அடையாள அட்டைகள் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய ஓய்வூதிய அட்டைகள் ஆகியவையும் செல்லுபடியாகும் ஆவணங்களாகக் கருதப்படுகின்றன. கூடுதலாக, இந்தியப் பதிவாளர் ஜெனரல்(RGI) வழங்கிய ஸ்மார்ட் கார்டு, வங்கி அல்லது தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.