ரூ. 634 கோடி லஞ்ச வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றிய கே.என். நேருவுக்கு எதிராக தொடரப்பட்ட ரூ. 634 கோடி லஞ்ச வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. பணத்தைப் பெற்றுக்கொண்டு பணி நியமனங்களை வழங்கியதாக எழுந்துள்ள இந்த வழக்கில் விசாரணையை சந்தித்தே ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கே.என். நேருவுக்குப் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை
ரூ. 634 கோடி லஞ்சப் புகார் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தனது பதவிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் பல்வேறு பணி நியமனங்களை வழங்குவதற்காக ரூ. 634 கோடி வரை லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது.
இப்புகாரின் அடிப்படையில், அண்மையில் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையைத் தொடர்ந்து, கே.என். நேரு மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கே.என். நேரு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றம்
மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.
முன்னாள் அமைச்சராக இருந்த கே.என். நேரு தன் மீதான லஞ்சப் புகார் வழக்கின் விசாரணையை சட்டப்படி எதிர்கொண்டே ஆக வேண்டும் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கே.என். நேரு மீதான வழக்கு விசாரணையை அடுத்தகட்ட தீவிர நிலைக்கு கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.