குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் - மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம்
சென்னை புளியந்தோப்பு பகுதியினை சேர்ந்தோர் மசூத்-சௌமியா தம்பதி. கடந்த 5ம் தேதி சௌமியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக ஆம்புலன்ஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நெடுநேர காத்திருப்பிற்கு பிறகு சௌமியா அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை மூடப்பட்டிருந்தது. பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு மின்சாரம் இல்லாததால் சிகிச்சையளிக்க முடியவில்லை. பின்னர் படகு மூலம் சௌமியா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது, சௌமியாவிற்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தையின் உடலை முறையாக துணியினை சுற்றி கொடுக்காமல் மருத்துவமனை பிணவறை ஊழியர்கள், அட்டை பெட்டியில் வைத்து குழந்தையின் தந்தையிடம் கொடுத்துள்ளனர்.
3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது
இதனிடையே, அட்டைப்பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட குழந்தையின் உடலை அவரது தந்தை எடுத்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனை கண்ட அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இறந்த குழந்தையின் உடலை ஒப்படைக்க ரூ.2,500 லஞ்சமாக கேட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே, இது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.