ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து குதிக்கப் போவதாக மிரட்டிய கேரள நபர் கைது
துபாய் - மங்களூரு இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த ஒருவர் விமானத்தில் இருந்து குதிக்கப்போவதாக விமான பணியளர்களை மிரட்டியதால் கைது செய்யப்பட்டார். அவர் குதிக்கப்போவதாக மிரட்டியதை அடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் சித்தார்த்த தாஸ், அந்த பயணி மீது புகார் அளித்தார். அதன் பிறகு, விமானம் மங்களூருவில் தரையிறங்கியவுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த கேரள நபர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமானத்தில் அவர் செய்த செயல்கள் பணியாளர்களுக்கும் சக பயணிகளுக்கும் குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியது.
மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதால் கேரள நபர் கைது
"அவர் கட்டுக்கடங்காத முறையில் நடந்து கொண்டார். விமானம் பயணித்து கொண்டிருந்த போது அவர் இடையூறுகளை உருவாக்கினார். அவர் ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தினார். விமானத்தில் இருந்து கடலில் குதித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததால், அவரது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது" என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் மே 8ஆம் தேதி நடந்தது. மங்களூருவில் தரையிறங்கியதும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த நபர் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக பாஜ்பே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.