LOADING...
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் அதிகரிப்பு

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 18, 2025
01:20 pm

செய்தி முன்னோட்டம்

மூளையை உண்ணும் அமீபா என அழைக்கப்படும் நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria fowleri) என்ற அரிய வகை நோய்த்தொற்று, கேரளாவில் அதிகரித்து வருகிறது. இந்த ஒற்றை செல் உயிரினம், அசுத்தமான நீரில் மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து, மூளையை உண்ணும் மெனிங்கோஎன்செபலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis-PAM) என்ற உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டு மட்டும், கேரளாவில் 70 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மையில், 45 வயது மதிக்கத்தக்க ஷோபனா என்ற பெண், சாதாரண அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓரிரு நாட்களிலேயே உயிரிழந்தது இந்த நோயின் தீவிரத்தைக் காட்டுகிறது. இந்த நோய்த்தொற்று, மூளையின் திசுக்களை வேகமாக அழித்து, உலகளவில் 95% உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.

இறப்பு விகிதம்

இறப்பு விகிதத்தைக் குறைத்து வருவதாக அதிகாரிகள் தகவல்

இந்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், கேரளாவின் பொதுச் சுகாதாரத் துறை ஒரு நம்பிக்கையான போக்கைக் காட்டியுள்ளது. மேம்பட்ட ஆய்வகச் சோதனைகள் மூலம் நோயை முன்கூட்டியே கண்டறிந்து, இறப்பு விகிதத்தைக் குறைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நோய் கண்டறியப்பட்டவுடன், நுண்ணுயிர்க்கொல்லிகள் (antimicrobials) மற்றும் ஸ்டீராய்டுகள் (steroids) கொண்ட மருந்து கலவையைப் பயன்படுத்தி, நோயாளிகளைக் குணப்படுத்துவதே இங்குப் பின்பற்றப்படும் தனித்துவமான சிகிச்சை முறையாகும். கேரளாவில் 55 லட்சம் கிணறுகள் மற்றும் 55 ஆயிரம் குளங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் குடிநீர் மற்றும் குளிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. காலநிலை மாற்றத்தினால் வெப்பம் அதிகரிப்பது, இந்த அமீபா வளர்வதற்குச் சாதகமான சூழலை உருவாக்குகிறது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.