கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரள எல்லையோரத்தில் இருக்கும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்குள் நுழையும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்குமாறு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள விடுதிகளை தீவிரமாக சோதனை செய்யுமாறும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் டிஜிபி சங்கர் ஜிவால் தனது உத்தரவில் கூறியுள்ளார். இதற்கிடையில், நீலகிரியில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர் என்று அம்மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ
எச்சரிக்கை நிலையில் கேரளா, டெல்லி மற்றும் கர்நாடகா
கேரளாவில் இன்று காலை ஒரு கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார் மற்றும் 40 பேர் காயமடைந்தனர். "ஒருவர் இறந்துவிட்டார், அவரது உடல் களமச்சேரி மருத்துவக் கல்லூரியில் உள்ளது. ஏழு பேர் களமச்சேரி மருத்துவக் கல்லூரியில் ஐசியூவில் உள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயரக்கூடும்." என்று சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இந்த குண்டுவெடிப்பை அடுத்து, கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று 14 மாவட்ட காவல்துறைத் தலைவர்களுக்கு கேரள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அது போக, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.