தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா எம்பிக்கு கத்தி குத்து
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி., கோத்தா பிரபாகர் ரெட்டி கத்தியால் குத்தப்பட்டார். எம்.பி., பாதிரியார் ஒருவரின் வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அடையாளம் தெரியாத ஒரு நபர் எம்பியிடம் கைகுலுக்குவது போல் அருகில் சென்று திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எம்பியின் வயிற்றில் குத்தினார். இந்த சம்பவம் நடந்ததும் அருகில் இருந்த பிஆர்எஸ் கட்சி ஊழியர்கள் குற்றவாளியை பிடித்து சரமாரியாக தாக்கினர். அதன் பின், அவர் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார்.
எம்பியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்
இதற்கிடையில், மேடக் லோக்சபா தொகுதியின் எம்.பியான கோத்தா பிரபாகர் ரெட்டி உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது வயிற்றில் காயம் பட்டிருந்தாலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். "தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது விவரங்களை நாங்கள் சரிபார்த்து வருகிறோம்" என்று சித்திப்பேட்டை காவல்துறை ஆணையர் என் ஸ்வேதா தெரிவித்துள்ளார். ஆனால், அவர் எதற்காக எம்பியை கத்தியால் குத்தினார் என்பது இன்னும் தெரியவரவில்லை. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக எம்எல்ஏ ரகுநந்தனை எதிர்த்து போட்டியிட இருக்கும் கோத்தா பிரபாகர் ரெட்டி, 2014இல் எம்பியாக முதன்முதலில் பதவியேற்றார்.