'இதுல அரசியல் பண்ணாதீங்க': கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி
செய்தி முன்னோட்டம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ரத்து உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என்றும் மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்குக் கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை வழங்கியது.
பின்னணி
வழக்கின் பின்னணி
இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசியலமைப்பு விதிகளை மீறி இந்த கருணை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜூலை 27 அன்று பணி நியமன ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பரித்வாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக அரசு வேலை வழங்க விராம்பினால் அதில் என்ன தவறு உள்ளது?" என வாதிட்டார்.
நீதிபதிகள் கேள்வி
"அரசியலைக் கொண்டு வராதீர்கள்"
விசாரணையின் போது மனுதாரர் தரப்பை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "ஒரு துயரச் சம்பவத்தில் குடும்பத்தின் ஒரே ஆதரவை இழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்தால், அதை எப்படித் தவறு என்று கேள்வி கேட்க முடியும்? அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் வாழ்வாதார உதவி செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது" எனக் குறிப்பிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட எதிர்தரப்பு வழக்கறிஞர், இச்சம்பவத்திற்கு காரணமான கட்சியே ஆட்சியில் இருப்பதால் இதில் 'நலன் முரண்பாடு' இருப்பதாகக் கூறினார்.
அவர் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆஜராவதாக தெரிவித்ததும், "இந்த விவகாரத்திற்குள் அரசியலைக் கொண்டு வராதீர்கள்" என நீதிபதி சந்திரன் காட்டமாகக் கூறினார்.
இடைக்காலத் தடை
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பணி நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும்,
இந்த மனு குறித்து தமிழக அரசு மற்றும் எதிர்தரப்பினர் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.