"எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை": கார்த்தி சிதம்பரம்
மோடியுடன் ஒப்பிடும்போது, ராகுல் காந்தி நிகரான தலைவர் இல்லை என்று கூறியதாக கார்த்தி சிதம்பரத்தின் பேட்டி ஒன்று வைரலான நிலையில், கார்த்தி சிதம்பரத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், தன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதரம்பரம், அவ்வப்போது பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறுவதுண்டு. இந்தநிலையில் தான் டிசம்பர் மாத இறுதியில், தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கார்த்தி, மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல்காந்தி நிகரான தலைவர் இல்லை என கூறியிருந்தார். அதோடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவைதான் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
கார்த்தியின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூடி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினராக தன்னிடம் கேள்வி கேட்க, காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்த குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஒழுங்கு நடவடிக்கை இக்குழுவின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றதாகவும், கட்சி உள்விவாரங்களை வெளியில் சொல்ல மாட்டோம் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.