IPLஇல் பந்தயம் கட்டி ரூ.1 கோடியை இழந்த கணவன்: மனைவி தற்கொலை
தர்ஷன் பாபு என்பவர் கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டுவதில் விருப்பமுள்ள ஒரு பொறியாளர் ஆவார். இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) விளையாட்டுகளில் 2021 முதல் அவர் பெரிய பந்தயம் கட்டி அவர் விளையாடி வந்திருக்கிறார். சில நேரங்களில் அவரிடம் பணம் இல்லையென்றால், பணத்தை கடனாக வாங்கி பந்தயம் கட்டுவது அவரது வழக்கமாகும். இந்நிலையில், கடன் கொடுத்தவர்களின் தொடர் தொல்லையால் சோர்வடைந்த தர்ஷன் பாபுவின் 23 வயது மனைவி, தற்கொலை செய்து கொண்டார். கடந்த மார்ச் 18ஆம் தேதி கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள தனது வீட்டில் ரஞ்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தர்ஷன் ரூ.1 கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்துள்ளதாக அவரது குடுமபத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிலுவையில் இருக்கும் ரூ.84 லட்சம் கடன்
ஹோசதுர்காவில் உள்ள சிறு நீர்ப்பாசனத் துறையில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த தர்ஷன் , 2021 முதல் 2023 வரை ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதனால், தர்ஷன் - ரஞ்சிதா தம்பதியருக்கு அதிக நிதிநிலை பிரச்சனைகள் வந்தது. ஐபிஎல்லில் பந்தயம் கட்ட ரூ.1.5 கோடிக்கு மேல் தர்ஷன் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே 1 கோடி ரூபாய் கடனை திருப்பி அளித்துவிட்டதாகவும், ஆனால் இன்னும் ரூ.84 லட்சம் கடன் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்கும் ரஞ்சிதாவின் தந்தை வெங்கடேஷ், பணம் கொடுத்தவர்களின் தொடர் துன்புறுத்தலால் தனது மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இதனால் அவர் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.