கர்நாடக முதல்வர் பதவிக்கு அடித்து கொள்ளும் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் விசுவாசிகள்
காங்கிரஸ் அமைச்சரும், சித்தராமையாவின் விசுவாசியுமான ஹெச்.சி.மகதேவப்பா, சித்தராமையா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார் என்று கூறியதை அடுத்து, கர்நாடக முதல்வர் பதவி மீதான பிரச்சனை மீண்டும் தொடங்கியுள்ளது. மகாதேவப்பாவின் கருத்துக்கு பதிலளித்த டி.கே.சிவகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் எம்.பியுமான டி.கே.சுரேஷ், இதுபோன்ற கருத்துக்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். "மகாதேவப்பா ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அவர் அரசியல் அதிகாரம் கொண்ட ஒரு தலைசிறந்த தலைவர் ஆவார். அவருக்கு அமைச்சராக பணியாற்றுவதை விட மற்ற விஷயங்களில் அதிக ஆர்வம் இருக்கிறது போல, அதனால்தான் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்'' என்று சுரேஷ் கூறியுள்ளார்.
சித்தராமையாவுக்கு முன்னாள் அமைச்சர் விடுத்த சவால்
இதற்கிடையில், சிவகுமாரின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவரை முதலமைச்சராகப் பார்ப்பது குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். "டிகே எங்களுக்கு சீட்டு வழங்குவதன் மூலம் நிறைய உதவி செய்திருக்கிறார். நயனா மோட்டம்மா, சுதாகரோ, லட்சுமி ஹெப்பால்கர் ஆகியோர் மந்திரியாவதற்கு அவர் உதவியுள்ளார். அவர் முதலமைச்சராக ஆசிர்வதிக்க வேண்டும் என்று இங்கு இருக்கும் மக்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று ஒரு பொது நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஹெச்.டி.தம்மையா கூறியுள்ளார். இந்த பிரச்சனையில் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், பாஜக காங்கிரஸை கேலி செய்து வருகிறது. மேலும், முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், முதல்வர் பதவி காலம் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தால் அதை வெளியே கூறும்படி சித்தராமையாவுக்கு பகிரங்க சவால் விடுத்திருக்கிறார்.