கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று(ஏப் 17) காங்கிரஸில் இணைந்தார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அந்த பட்டியலில் பல முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பெயரும் சேர்க்கப்படவில்லை. இதனால், பிரபல லிங்காயத் தலைவரான ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேற்று பாஜகவில் இருந்து விலகினார். அதன்பின் அவர், மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பெங்களூருவில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அக்கட்சியின் கர்நாடக தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்ற ஜெகதீஷ் ஷெட்டர்
"மூத்த தலைவரான எனக்கு பாஜக சீட்டை வழங்கும் என நினைத்தேன். ஆனால், அது கிடைக்கவில்லை என்றதும், அதிர்ச்சி அடைந்தேன். யாரும் என்னிடம் பேசவும் இல்லை, என்னை சமாதானப்படுத்தவும் முயற்சிக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு கட்டிய கட்சியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்." என்று ஜெகதீஷ் ஷெட்டர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், அதனால் "காங்கிரஸின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை ஏற்று காங்கிரஸில் இணைகிறேன்." என்றும் அவர் கூறியுள்ளார். ஷெட்டர் கடந்த ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்றவர் ஆவார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தனது போட்டியாளரான காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் நல்வாட்டை தோற்கடித்தார்.