கர்நாடகா: 3 பேரை கடத்தி அவர்களது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய கும்பல்
கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் 3 பழைய கார் டீலர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரமான நிகழ்வின் வீடியோ காட்சிகள் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. கடத்தி செல்லப்பட்டவர்களை நிர்வாணமாக்கி அவர்களின் அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி ஷாக் கொடுப்பதை அந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. இந்த கொடூர குற்றத்தில் தொடர்புடைய ஏழு பேரை கர்நாடக போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் இம்ரான் படேல், ஸ்டீல் மாதீன் என்ற முகம்மது மதீன், முகமது ஜியா உல் ஹுசைன், முகமது அப்சல் ஷேக், உசேன் ஷேக், ரமேஷ் மற்றும் சாகர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பணம் கேட்டு சித்தரவதை செய்த கும்பல்
போலீஸ் அறிக்கையின்படி, இவர்கள் ஒரு பெரிய கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்தக் கும்பலில் மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கலபுர்கியில் உள்ள விஸ்வவித்யாலயா காவல் நிலையத்தில் மே 5ஆம் தேதி இரவு 9:30 மணியளவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தனர். கடந்த மே மாதம் 4ஆம் தேதி செகண்ட் ஹேண்ட் காரை சோதனை செய்வதாக கூறி தாங்கள் கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள்ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் சிறைபிடிக்கப்பட்டனர். அங்கு அவர்களை தடிகளால் அடித்த ஒரு கும்பல், அவர்களிடம் பணம் கேட்டு அவர்களை சித்தரவதை செய்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.