கார்கில் வெற்றி தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது?
இந்தியாவில் கார்கில் விஜய் திவாஸ் என்று அழைக்கப்படும் கார்கில் வெற்றி தினம் ஜூலை 26ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது. 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, கார்கில் போரில் கலந்து கொண்ட இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்திற்கு இன்று அஞ்சலி செலுத்தப்படும். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்குள்(LOC) பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியதை அடுத்து, கார்கில் போர் தொடங்கியது. இந்த போரில் 527 இந்திய வீரர்களும் 453 பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, ஜூலை 26, 1999அன்று, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இந்தியா இந்த போரில் வெற்றி பெற்றது.
இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சலி
கார்கில் விஜய் திவாஸ் தினத்தையொட்டி, கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். "இந்தியாவின் இணையற்ற வீரர்களின் துணிச்சலை நினைவுப்படுத்தும் கார்கில் விஜய் திவாஸ், எப்போதும் நாட்டின் மக்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்" என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும், இன்று கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 1999ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். "தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக அனைத்தையும் தியாகம் செய்த அந்த துணிச்சலான மகன்களை நான் வணங்குகிறேன்." என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.