லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வழக்கம் போல் நேற்று(ஏப்ரல்.,25) அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கையில், 2 மர்மநபர்கள் அங்கு வந்துள்ளனர். திடீரென அவர்கள் லூர்துபிரான்சிஸை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர் தப்பிக்க முயன்றநிலையில் அவரைச்சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லூர்து பிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரை கொன்றவர்களுள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மணல் திருட்டினை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி உறுதி
இந்நிலையில் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, அந்த ரூ.1 கோடிக்கான காசோலையினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி லூர்து பிரான்சிஸ் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். அதன் பின் பேசிய அவர், இந்த கொலையினை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று ஆட்சியரிடம் பரிந்துரைத்துள்ளேன் என்று கூறினார். மேலும் மணல் திருட்டினை முழுமையாக ஒழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கனிமொழி உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.