தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராமநிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வழக்கம் போல் நேற்று(ஏப்ரல்.,25)அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கையில், 2 மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். திடீரென அவர்கள் லூர்துபிரான்சிஸை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர் தப்பிக்க முயன்ற நிலையில் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்துச்சென்றனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் லூர்துபிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவயிடத்திற்கு மாவட்டச்சூப்பிரண்ட், தாசில்தார் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்தனர்.
தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 3மாதங்களுக்கு முன்னர், முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் லூர்து ரோந்து சென்றுள்ளார். அப்போது அங்கு சிலர் மணல் அள்ளி இருசக்கரவாகனத்தில் ஏற்றியதை கண்டித்ததுடன், அவர்கள்மீது போலீசில் புகாரளித்ததாக கூறப்படுகிறது. இதன் முன்விரோத காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையே அகரம் பகுதியில் ஒரு நபர் அரிவாளுடன் சுற்றுவதாக முறப்பநாடு காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்துச்சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளார்கள். விசாரணையில் அவர் லூர்துபிரான்சிஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராமசுப்ரமணியம் என்பது தெரியவந்த நிலையில் அவர் கைதுச்செய்யப்பட்டுள்ளார். மேலும் ஓர் குற்றவாளியான மாரிமுத்து என்பவரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.பாலாஜி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.