போதிய நிதி இல்லாமல் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்கள் என மொத்தம் 650க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியம் பெறுவோர் 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் இவர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவே ரூ.10.50 கோடி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் ஓராண்டுக்கு மேலாக இந்த பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கடந்த செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தற்போதுவரை கொடுக்காமல் உள்ளதால் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், அலுவல் பணியிலுள்ள ஊழியர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெ.குமாரிடம் பேராசிரியர்கள், பல்கலைக்கழக அலுவலர் சங்கத்தினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக வருவாயை அதிகரிக்க நிர்வாகம் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை
அதன் பின்னர் இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூறுகையில், இதற்கு முன்னர் வேறு சில நிர்வாக ரீதியான பிரச்சனைகள் இருந்த நிலையிலும் நிதி நெருக்கடி இருந்ததில்லை. சமீபகாலமாக பல்கலைக்கழக வருவாயை அதிகரிக்க நிர்வாகம் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள், இப்பல்கலைக்கழகத்தில் நிலுவையிலுள்ள 5000க்கும் மேற்ப்பட்ட ஆடிட் ஆட்சேபத்திற்கு நிர்வாகம் உரிய பதிலளிக்காததால் அரசிடமிருந்து தேவையான நிதியையும் பெற முடியவில்லை. ஒவ்வொரு மாதமும் சம்பளத்தினை நம்பியே இங்கு பணிபுரியும் பலர் உள்ள நிலையில், ஓய்வூதியர்கள் மருத்துவச் செலவுக்காக வட்டிக்கு கடன் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, துணைவேந்தர், பதிவாளர் மற்றும் நிர்வாகப்பொறுப்பில் உள்ளவர்கள் நிதிநிலையினை சீரமைக்க தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.