கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு-கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்துக்கிடந்தார்.
இதனால் கடந்தாண்டு ஜூலை 17ம்தேதி பெரும் கலவரம் அந்த பள்ளியில் நடத்தப்பட்டதோடு பள்ளி பொருட்கள் அனைத்தும் நாசமானது.
பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீமதி மரணம் மற்றும் இந்த கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையினை மேற்கொண்டு வந்தனர்.
9 மாதக்கால விசாரணைக்குப்பிறகு சிபிசிஐடி இதுகுறித்த 1,152 பக்க குற்றப்பத்திரிகையினை இன்று(மே.,15)தாக்கல் செய்துள்ளனர்.
அதில், மாணவியின் மரணம் தற்கொலை தான்.
பாலியல் தொந்தரவு மற்றும் கொலைக்கான ஆதாரங்கள் ஏதுமில்லை.
குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி மரணத்திற்கு காரணமில்லை.
பள்ளி தாளாளர்,செயலாளர்,ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கலவரம்
தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் முறைப்படுத்தவில்லை
மேலும், சக மாணவர்கள் மற்றும் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, ஸ்ரீமதிக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை என்று தெரிகிறது.
தொடர்ந்து, மாணவி ஸ்ரீமதி தங்கியிருந்த விடுதியானது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று நடத்தப்படவில்லை.
மாணவி இறந்த அன்றைய தினமே இறப்புக்கான காரணத்தினை காவல்துறை கூறியிருந்தால் தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்காது.
தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டத்தை கனியாமூர் பள்ளி முறைப்படுத்தவில்லை என்னும் காரணத்தினால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக அந்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.