கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - தகுதியானோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்
தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு கிட்டத்தட்ட 1.70 கோடி வரையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 1 கோடி 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதியானவை என்று தேர்வு செய்யப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இத்திட்டம் மூலம் மாதந்தோறும் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.1,000 தமிழக அரசால் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையத்திற்கு சென்று மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
அதனடிப்படையில் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி வரை மேல்முறையீடு செய்துள்ளார்களாம். இதனை தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. இதில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வரும் நவம்பர் 25ம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு தகுதி பெற்றவர்கள் அனைவருக்கும் உதவி தொகை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.