சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்; மத்திய அரசு ஒப்புதல்
எட்டு உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகள் நியமனம் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்த மறுநாள், மத்திய அரசு சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதற்கு ஒப்புதல் அளித்தது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து, சென்னை, டெல்லி, மும்பை, மேகாலயா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகள் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி டெல்லி உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி மன்மோகன், அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற நீதியாக உள்ள நீதிபதி ராஜீவ் ஷக்தேர் இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவின் தலைமை நீதிபதியாக நிதின் மதுகர் ஜம்தார் நியமனம்
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நிதின் மதுகர் ஜம்தார் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டெல்லி நீதிமன்றத்தின் நீதிபதி சுரேஷ் குமார் கைத் நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பிரசன்னா முகர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் நீதிமன்ற நீதிபதியாக உள்ள நீதிபதி தாஷி ரப்ஸ்தான் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி எம்.எஸ்.ராமச்சந்திர ராவ் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.