கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு
கடந்த 2022ம்.,ஆண்டு சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் பேட்டரி ரிலே பெட்டியினை திருடியதாக ரயில்வே பாதுகாப்புப்படை தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அச்சிறுவன் கடந்த டிசம்பர் 31ம்.,தேதி சீர்திருத்த பள்ளி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் காரணமாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தினை தொடர்ந்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், பாதுகாப்பு விடுதிகள்,சிறப்பு இல்லங்கள் உள்ளிட்டவற்றின் மேம்பாடுகள் மற்றும் திறன்கள் குறித்து அறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஓர் பிரதிநிதி கொண்டு முன்னாள் நீதிபதி தலைமையில் உயர்நிலை குழு அமைக்க உத்தரவிட்டார்.
புது சட்டங்களை உடனே அமல்படுத்த அறிவுறுத்தல்
அதன்படி சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு கடந்த ஏப்ரல்.,11ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த குழுவானது தமிழ்நாடு முழுவதுமுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், பாதுகாப்பு விடுதிகள்,சிறப்பு இல்லங்கள் உள்ளிட்டவற்றிற்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது 500 பக்க அறிக்கையினை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளனர். அதில், பாதுகாப்பு இல்லங்களை பதிவு செய்தல் மற்றும் அங்கீகரித்தலுக்கான விதிகளை மறுஆய்வு செய்து திருத்தம் கொண்டுவர வேண்டும். சீர்திருத்த பள்ளிகள், பாதுகாப்பு விடுதிகளுக்கான புது சட்டங்கள் கடந்த 2021ம் ஆண்டு இயற்றப்பட்டு 2022ம் ஆண்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ள சட்டங்களை உடனே அமலுக்கு கொண்டுவர வேண்டும். அனைத்து கூர்நோக்கு இல்லங்களிலும் 24 மணிநேர மனநல ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும்.
கூர்நோக்கு இல்லங்களில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்
மாவட்டத்திற்கு ஓர் இல்லமாவது செயல்படும் பட்சத்தில் அது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். சீர்திருத்த பள்ளிகள் சிறைபோல் இல்லாமல் புது கட்டமைப்புகள் செய்யப்படவேண்டும். சிறுவர்கள் எந்நேரமும் சிறையில் அடைத்து வைக்காமல், அவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். கண்காணிப்பாளர்களோடு துணை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டு 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். 13-16 வயது வரை உள்ளோரை ஒரு குழுவாகவும், அதற்கு மேற்பட்ட வயதுடையோரை ஓர் குழுவாகவும் தனித்தனியே அடைக்கவேண்டும். துணி துவைக்க இயந்திரங்கள், நவீன கழிப்பறை வசதிகள், கொசு விரட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
சமையல் செய்வோர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட வேண்டு
காலநிலை ஊதியம் அளிக்கப்பட்டு சமையல் செய்வோர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தனி பிரிவின் கீழ் சீர்திருத்த பள்ளிகளை கொண்டுவர, இயக்குனர்கள் தலைமையில் சிறப்பு சேவை துறைகளை உருவாக்கி தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த அறிக்கையினை அளிக்கையில் நீதிபதி சந்துருவின் மகள் சக்தி, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, சமூகநலத்துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, துறை ஆணையர் அமுதவல்லி உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.
முன்னாள் நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர்
இந்நிலையில் இந்த அறிக்கையினை பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைத்தளத்தில், "மதிப்பூதியம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் குழந்தைகள் நலன் கருதி இப்பணியினை ஏற்று செய்து முடித்த முன்னாள் நீதிபதி சந்துருவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்றும், "விரைவில் இந்த பரிந்துரைகள் சமூகநலத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்" என்றும் பதிவு செய்துள்ளார். இந்த அறிக்கை குழந்தைகள் தினமான நேற்று(நவ.,14) முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.