ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள்
ஜனவரி-20 முதல் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் புதிய கட்டிட சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் சாமோலி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சனிக்கிழமை(ஜன 28) கண்டுபிடிக்கப்பட்ட 863 கட்டமைப்புகளில் உள்ள விரிசல்கள் ஜனவரி-20 அன்று கண்டுபிடிக்கப்பட்டதைப் போலவே இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. மறுபுறம், அப்பகுதி மக்கள், அதிகாரபூர்வ கணக்கெடுப்புக்கு முரணாக, வீடுகளில் விரிசல்கள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவதாகக் கூறியுள்ளனர். பத்ரிநாத், சில மலையேற்றப் பாதைகள் மற்றும் பல யாத்ரீக தலங்களை இணைக்கும் முக்கிய இடமாக ஜோஷிமத் இருக்கிறது. உத்தரகாண்ட் நகரம் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு(எல்ஏசி) அருகில் உள்ளதால், ஜோஷிமத் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.
எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்க அரசு முயல்கிறது: ஜேபிஎஸ்எஸ்
இருப்பினும், ஜோஷிமத்தின் புவியியல் அமைப்பு மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் காரணமாக இந்த பகுதி புதைய தொடங்கியது. சாமோலி மாவட்ட நிர்வாக அதிகாரிகள், 863 கட்டமைப்புகளில் விரிசல்கள் இருப்பதாகவும், அவற்றில் 181 கட்டமைப்புகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்றும் கூறியுள்ளனர். இது ஜனவரி 20 அன்று பதிவான அதே நிலையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "எங்கள் கணக்கெடுப்பு முடிந்துவிட்டது. நாங்கள் தரவைச் சரிசெய்து வருகிறோம். ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவை சிறியதாக இருக்கும்," என்று சாமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்ஷு குரானா கூறியதாக செய்திகள் கூறுகின்றன. PTI வெளியிட்ட தகவலின் படி, அப்பகுதி மக்கள் அதிகாரபூர்வ கூற்றுக்களை மறுத்து, கட்டுமானங்களில் விரிசல்கள் தினசரி ஏற்படுவதாக கூறி இருக்கின்றனர்.