JNU: பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டதால் மாணவர்கள் மீது கல் வீச்சு
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(JNU) பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி தொடரை திரையிட சில மாணவர்கள் முடிவு செய்திருந்தாக கூறப்படுகிறது. இந்த திட்டம், நேற்று(ஜன 25) மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டதால் தோல்வியடைந்தது. இதனை செல்போன்களில் பார்த்தவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் கற்கள் வீசியதாக கூறப்படுகிறது. இடதுசாரி ஆதரவாளர்கள் கற்கள் வீசிய இரண்டு மாணவர்களைப் பிடித்ததாக கூறியுள்ளனர். இருவரும், பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மாணவர் பிரிவான ஏபிவிபியைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். "ஏபிவிபி மாணவர்கள் எங்கள் மீது கற்களை வீசினர்." என்று மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என் சாய் பாலாஜி கூறி இருக்கிறார்.
நள்ளிரவில் மாணவர்கள் நடத்திய போராட்டம்
"மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் மெயின் கேட்டிற்கு வந்துள்ளோம். மின்சாரத்தை சீக்கிரமாக மீட்டெடுக்க வேண்டும். மின்சாரம் வரும் வரை நாங்கள் கேட்டை விட்டு நகர மாட்டோம். எங்கள் அழைப்புகளுக்கு போலீசார் பதிலளிக்கவில்லை," என்று அவர் மேலும் கூறியுள்ளார். இந்திய இடதுசாரி ஆதரவு மாணவர் கூட்டமைப்பு தலைவர் ஐஷேகோஷ், மின்தடைக்கு நிர்வாகமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, JNU நிர்வாகம் கருத்து தெரிவிக்கவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு, மாணவர்கள் ஒன்றுகூடி மொபைலில் இந்த ஆவணப்படத்தை பார்த்ததால் அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து, மாணவர்கள் கூட்டமாக சேர்ந்து நள்ளிரவில் பேரணியாக சென்று காவல்நிலையத்தின் முன்னிலையில் போராட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.