Page Loader
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் திடீர் கைது: என்ன காரணம்?
பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் கோயல் கைது செய்யப்பட்டார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் திடீர் கைது: என்ன காரணம்?

எழுதியவர் Sindhuja SM
Sep 02, 2023
09:28 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா: கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று(செப் 1) கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, அமலாக்க இயக்குனரகம்(ED) அவரிடம் விசாரணை நடத்தியது. முதலில், விசாரணைக்காக கோயல் தீவிர மோசடி விசாரணை அலுவலகத்திற்கு(SFIO) நேற்று அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து ED அதிகாரிகள் அவரை விசாரிக்க அழைத்துச் சென்றனர். ஏற்கனவே, ED அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த இரண்டு முறையும் அவர் அமலாக்க இயக்குனரகத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், நேற்று நடந்த விசாரணைக்கு பிறகு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் கோயல் கைது செய்யப்பட்டார்.

டொய்ஜ்

கனரா வங்கிக்கு ரூ.538 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கு 

74 வயதான கோயல், மும்பையில் உள்ள சிறப்பு PMLA நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவார். அந்த நீதிமன்றத்தில் ED அவரை காவலில் வைக்க கோரிக்கை விடுக்கும். கடந்த மே 5ஆம் தேதி, கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் சில முன்னாள் நிறுவன நிர்வாகிகள் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) FIR பதிவு செய்தது. கனரா வங்கியின் புகாரின் பேரில் இந்த FIR பதிவு செய்யப்பட்டது. ஜெட் ஏர்வேஸ்(இந்தியா) லிமிடெட்க்கு ரூ.848.86 கோடி கடன் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதில் ரூ.538.62 கோடி நிலுவையில் உள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.