ஜேஇஇ மெயின் 2027: ஜனவரி அமர்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்; கவனத்தில் கொள்ளவேண்டியவை
செய்தி முன்னோட்டம்
ஜேஇஇ மெயின் 2027 ஜனவரி அமர்வுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளை நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 12,23,255 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு 10,10,941 மாணவர்கள் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். தகுதியுள்ள மாணவர்கள் தாமதக் கட்டணத்தைத் தவிர்க்க jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜேஇஇ மெயின் 2027 முதல் அமர்வுத் தேர்வுகள் ஜனவரி 22, 23, 24, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டு எனப்படும் ஹால் டிக்கெட் 2027 ஜனவரி 13 ஆம் தேதி வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜேஇஇ மெயின் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகள்
மாணவர்கள் முதலில் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஜனவரி அமர்வு விண்ணப்ப இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
தொடர்ந்து புதிய பதிவை உருவாக்கி தங்களது தனிப்பட்ட மற்றும் கல்வித் தகுதி விவரங்களை விண்ணப்பப் படிவத்தில் பிழையின்றி நிரப்ப வேண்டும்.
அதன்பின்னர் தேவையான புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை உரிய வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி சமர்ப்பித்த பிறகு விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள்
10+2 கல்வித் தகுதி வரம்புகளும் விண்ணப்பிக்கத் தகுதியான அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களும்
மத்திய மற்றும் மாநிலக் கல்வி வாரியங்கள், சிபிஎஸ்இ அல்லது சிஐஎஸ்சிஇ நடத்தும் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் நடத்தும் இரு ஆண்டு புகுமுகத் தேர்வு மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி கூட்டு சேவைப் படிப்பு முடித்தவர்களும் தகுதியுடையவர்கள்.
தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஐந்து பாடங்களுடன் மேல்நிலைப் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு இணையான கல்வித் தகுதி பெற்றவர்களும் இதில் பங்கேற்கலாம்.
சான்றிதழ்கள்
பதிவேற்ற வேண்டிய புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்களின் கோப்பு அளவு விதிமுறைகள்
விண்ணப்பதாரரின் வண்ணப் பாஸ்போர்ட் புகைப்படம் வெள்ளை நிறப் பின்னணியில் முகத்தின் 80 சதவீதப் பகுதி மற்றும் காதுகள் தெளிவாகத் தெரியும்படி இருக்க வேண்டும்.
புகைப்படம் 10 கேபி முதல் 300 கேபி அளவிற்குள் ஜேபிஜி வடிவிலும், கையொப்பம் 10 கேபி முதல் 50 கேபி அளவிற்குள் ஜேபிஜி வடிவிலும் பதிவேற்றப்பட வேண்டும்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 10 கேபி முதல் 300 கேபி வரையிலான பிடிஎஃப் கோப்பாக இணைக்கப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது சான்றிதழை 10 கேபி முதல் 300 கேபி அளவிற்குள் பிடிஎஃப் வடிவில் தெளிவாகப் பதிவேற்ற வேண்டும்.