
அமெரிக்காவின் வரி கொள்கைக்கு இடையே இன்று இந்தியாவிற்கு வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இன்று இந்தியா வருகை தருகிறார்.
இது நான்கு நாள் பயணமாகும். அவருடன் அமெரிக்க அதிகாரிகள் குழுவும் உள்ளனர்.
இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் அவருக்கு விருந்தளிக்கிறார்.
இந்த சந்திப்பில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த முன்னேற்றம், இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதார, அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் இந்திய குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.உலக நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அமெரிக்கா விதித்து வரும் இந்த சூழலில், குறிப்பாக இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீது 26% வரி விதித்துள்ள நேரத்தில் JD வான்ஸின் இந்தியா வருகை கவனத்தை ஈர்க்கிறது.
நிகழ்ச்சி நிரல்
இந்தியாவில் JD வான்ஸ்-இன் நிகழ்ச்சி நிரல்
பிரதமர் மோடி தலைமையிலான பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி வந்தவுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்கும், உள்ளூர் கைவினைப்பொருட்கள் சந்தைக்கும் செல்வார்.
ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை வான்ஸ் குழுவினர் ஜெய்ப்பூருக்குச் சென்று வரலாற்று சிறப்புமிக்க அமர் கோட்டை மற்றும் பிற கலாச்சார தளங்களைப் பார்வையிடுவார்கள்.
அன்றைய தினம், துணை ஜனாதிபதி ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் உரையாற்றுவார்.
இதில் இராஜதந்திரிகள், கொள்கை வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.