ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன்கள் நடமாட்டம்; ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை
செய்தி முன்னோட்டம்
ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை (IB) மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (LoC) பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாகிஸ்தானில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் கண்டறியப்பட்டதை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பா, ரஜௌரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் இந்த ட்ரோன் நடமாட்டம் பதிவாகியுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, எல்லை தாண்டி இந்திய வான்பரப்பிற்குள் நுழைந்த இந்த ட்ரோன்கள், முக்கியமான ராணுவ நிலைகளுக்கு மேல் பறந்துவிட்டு மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றன. ரஜௌரி மாவட்டத்தின் நௌஷெரா செக்டாரில், மாலை 6:35 மணியளவில் கானியா-கல்சியன் கிராமத்தின் மேல் பறந்த ட்ரோனை நோக்கி இந்திய ராணுவத்தினர் மெஷின் துப்பாக்கிகளால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர்.
ஆயுத கடத்தல்
ட்ரோன்கள் பயன்படுத்தி ஆயுதங்களை சப்ளை செய்யும் தீவிரவாதிகள்
அதேபோல், சம்பா மாவட்டத்தின் ராம்கர் செக்டார் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட் பகுதிகளிலும் இத்தகைய ஊடுருவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் ஏதேனும் எல்லை பகுதிகளில் வீசப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில், இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை சம்பா மாவட்டத்தின் பாலூரா கிராமத்தில் ட்ரோன் மூலம் வீசப்பட்ட இரண்டு பிஸ்டல்கள், மூன்று மேகசின்கள் மற்றும் கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ட்ரோன்கள் ஊடுருவியிருப்பது பாதுகாப்பு முகமைகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டிய ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சிகளை முறியடிக்க கூடுதல் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் ரோந்துப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.