
சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஜம்மு காஷ்மீரில் பென் டிரைவ் மற்றும் வாட்ஸ்அப்பிற்குத் தடை விதிப்பு
செய்தி முன்னோட்டம்
சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஜம்மு காஷ்மீர் அரசு, அனைத்துத் துறைகளிலும் பென் டிரைவ்களைப் பயன்படுத்தவும் மற்றும் உத்தியோகபூர்வ தகவல்தொடர்புக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட பொதுச் செய்தியிடல் தளங்களைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. பொது நிர்வாகத் துறை ஆணையர் செயலாளர் எம்.ராஜு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். சமீபத்திய சைபர் தாக்குதல்களைத் தொடர்ந்து, தரவுப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சைபர் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதையும், முக்கியமான அரசுத் தகவல்களைப் பாதுகாப்பதையும், தரவு மீறல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகல் அபாயங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாக அரசுத் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் தளங்கள்
பாதுகாப்பற்ற ஆன்லைன் தளங்கள்
ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் உள்ள சிவில் செகரட்டேரியட் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை ஆணையர் அலுவலகங்கள் உட்பட, அனைத்து அரசு நிர்வாகத் துறைகளிலும் உத்தியோகபூர்வ சாதனங்களில் பென் டிரைவ்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உத்தியோகபூர்வ அல்லது ரகசியத் தகவல்களைப் பகிர, செயலாக்க அல்லது சேமிக்க வாட்ஸ்அப் அல்லது iLovePDF போன்ற பாதுகாப்பற்ற ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்துவதும் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்துர் நடந்தபோது, பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பல அதிகாரபூர்வ தளங்கள், குறிப்பாக மின் துறையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்தத் தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீருக்குள் பொதுச் சேவைகள் மற்றும் அதிகாரபூர்வ செயல்பாடுகளைப் பாதித்தது குறிப்பிடத்தக்கது.