ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்
தமிழ்நாடு மாநிலத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பாலா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள் அந்தந்த மாநில அரசுகள் நடத்துவதற்கு சிறப்பு சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாக கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் இன்று(மே.,18) அளித்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக மெரினாவில் போராட்டம் நடத்தியபோது தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டினை அனுமதிக்கும் அவசர சட்டத்தினை இயற்றியது.
ஜல்லிக்கட்டில் துன்புறுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடுஅரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும். இதுபோன்ற சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு உரிமையுள்ளது. எனவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை. ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழ்நாடுஅரசு அளித்த ஆவணங்கள் அனைத்தும் எங்களுக்கு திருப்தியளித்துள்ளது என்று கூறியுள்ளார்கள். மேலும் மனிதர்களுக்கு சமமாக விலங்குகளுக்கு உரிமையில்லை. தமிழகஅரசின் சட்டத்திருத்தம் சட்டவிதிகளுக்கு உட்பட்டே இயற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டினை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பின்னர், அதில் நீதிமன்றம் தலையிடமுடியாது. எனினும் கலாச்சாரம் என்றாலும், துன்புறுத்தலினை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா?என்பதனை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து,ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.