'இரட்டை வேடம் கட்டும் ஆதிக்க நாடுகள்': வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இது இன்னும் இரட்டை வேடம் கட்டும் உலகமாகவே உள்ளது என்றும், செல்வாக்கு மிகுந்த ஆதிக்க நாடுகள் மாற்றத்திற்கான அழுத்தத்தை எதிர்க்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். வரலாற்று செல்வாக்கு மிக்க அந்த நாடுகள் திறன்களை ஆயுதமாக்கியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம், ஐக்கிய நாடுகளின் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) நடத்திய அமைச்சர்கள் அமர்வில் நேற்று பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் இதை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கனடாவுக்கு இடையிலான மோதல் வலுப்பெற்றிருக்கும் நிலையில், அமைச்சர் ஜெய்சங்கர் "ஆதிக்க நாடுகள்" குறித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தததாக பார்க்கப்படுகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
உலகளவில் மாற்றத்திற்கான அரசியல் அழுத்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், அந்த மாற்றத்தை ஏற்பதற்கு அரசியல் விருப்பம் இல்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சில் போன்ற செல்வாக்கு மிக்க இடங்களில் அமர்ந்துள்ளவர்கள் மாற்றத்திற்கான அழுத்தத்தை எதிர்க்கிறார்கள். இன்று பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்துபவர்கள் தங்கள் உற்பத்தி திறன்களை மேம்படுத்துகிறார்கள். அதே போல், நிறுவன செல்வாக்கு அல்லது வரலாற்று செல்வாக்கு உள்ளவர்கள் உண்மையில் அந்த திறன்களையும் ஆயுதமாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் சரியான விஷயங்களைச் சொல்வது போல் இருக்கும். ஆனால், இது இரட்டை வேடம் கட்டும் உலகம். மாற்றத்தை கொண்டுவர ஒரு வகையில், உலகளாவிய தெற்கு, சர்வதேச அமைப்புக்கு மேலும் மேலும் அழுத்தத்தை கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.