சீன எல்லையில் 2020க்கு முந்தைய நிலைக்கு ஒப்புதல்; உறுதி செய்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
செய்தி முன்னோட்டம்
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக ரோந்து செல்வது குறித்து இந்தியா-சீனா உடன்பாட்டை எட்டியதாக வெளியுறவு செயலாளர் அறிவித்த சிறிது நேரத்திலேயே, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், இந்திய ஆயுதப்படைகள் மீண்டும், சீன எல்லையில் 2020 மோதலுக்கு முன்பு அணுகக் கூடிய பகுதிகளில் ரோந்து தொடங்க முடியும் என்று அவர் கூறினார்.
முன்னதாக இன்று (அக்டோபர் 21), வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய மற்றும் சீன பேச்சுவார்த்தையாளர்கள் எல்ஏசியில் ரோந்து செல்வது குறித்து ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தார்.
எஞ்சிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய மற்றும் சீன பேச்சுவார்த்தையாளர்கள் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு செயலாளர் கூறினார்.
பிரிக்ஸ்
மோடியின் பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன் அறிவிப்பு
இந்த ஒப்பந்தம் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் ரோந்து செல்வது தொடர்பானது என்று தெரிகிறது.
இது 2020இல் கிழக்கு லடாக்கில் சீன இராணுவத்தின் நடவடிக்கைக்குப் பிறகு எழுந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிவகுப்பதாக அவர் கூறினார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யாவின் கசான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த திருப்புமுனை அறிவிப்பு வந்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், பிரிக்ஸ் மாநாட்டையொட்டி இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருதரப்பு சந்திப்பை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.