பூரி ரத யாத்திரைக்கு AI தொழில்நுட்பத்துடன் பலத்த பாதுகாப்பு
தேர் திருவிழா என்றும் அழைக்கப்படும் தனித்துவமான ஜகந்நாதர் ரத யாத்திரை ஒடிசாவில் இன்று (ஜூலை 7) தொடங்கியது. பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலைப் போலவே பழமையானது என்று நம்பப்படும் இந்த திருவிழா, இந்த ஆண்டு 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் இதற்காக ஒடிசாவில் கூடியிருப்பதால் கூட்டத்தை சிறப்பாக நிர்வகிக்க AI தொழில்நுட்பத்தை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக இது இருப்பதால், ஜகந்நாதர் திருவிழாவின் பாதுகாப்பு பணிகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. "முதன்முறையாக பாதுகாப்புக்காக நாங்கள் AI- அடிப்படையிலான CCTV கவரேஜைப் இந்த ஆண்டு பயன்படுத்தியுள்ளோம்." என்று ஒடிசா கூடுதல் டிஜிபி தயாள் கங்வார் கூறியுள்ளார்.
CCTV கேமராக்கள், ட்ரான்கள் மூலம் பாதுகாப்பு பணிகள் நடைபெறுகிறது
"பாதுகாப்புக்காக 40 இடங்களில் CCTV கேமராக்களை வைத்துள்ளோம். CCTV அமைப்புடன் இணைக்கப்பட்ட AI ஐப் பயன்படுத்தி கண்காணிப்பு பணி நடைபெறும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார். " CCTV கேமராக்களில் தெரியாத பகுதிகளை கண்டறியவும், நெரிசல் பகுதிகளை அடையாளம் காணவும் ஒரு ட்ரோன் அமைப்பைப் பயன்படுத்த உள்ளோம். மேலும், PA(பொது முகவரி) அமைப்புடனான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல்கள் அதிகம் ஏற்படும் 4-5 பகுதிகள் உள்ளன. எனவே, காவல்துறை அதிகாரிகளுக்கு உதவ அப்பகுதிகளில் ட்ரான்கள் பயனப்டுத்தப்படும்" என்று அவர் மேலும் கூறினார். அது போக, சட்டம் ஒழுங்கை பராமரிக்க, மாநில மற்றும் மத்திய அரசுகளில் இருந்து 180 படைப்பிரிவுகள்(ஒரு படைப்பிரிவில் 30 பணியாளர்கள் உள்ளனர்) பாதுகாப்புப் படையில் ஈடுபட்டுள்ளனர்.