"வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது", வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா
வருமான வரி செலுத்துபவர்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா. மேலும், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான இந்தக் காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது மேற்கூறிய தகவலைத் தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மல்கோத்ரா. மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நபர்கள் வருமான வரித் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 2021-22 மதிப்பீட்டு ஆண்டில், 4.83 கோடி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்த நிலையில், கடந்த 2022-23ல் 5.83 கோடி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை எவ்வளவு பேர் தாக்கல் செய்திருக்கிறார்கள்?
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு வருமான வரித் தாக்கல் வேகமாக நடைபெற்று வருவதாக சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டில், ஜூலை 12ம் தேதி வரை 1.2 கோடி நபர்கள் வருமான வரித் தாக்கல் செய்த நிலையில், தற்போது ஜூலை 12-ம் தேதி வரை 2.2 கோடி பேர் வருமான வரித் தாக்கல் செய்திருக்கிறார்கள். எனவே, காலக்கெடுவை நீட்டிப்பதற்கான தேவையும் இல்லை. ஆனால், சிலர் இந்தியாவின் சில பகுதிகள் ஏற்பட்ட வெள்ளத்தைச் சுட்டிக்காட்டி காலக்கெடுவை நீட்டிப்பதற்குக் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார் மல்கோத்ரா. மேலும், ஜூலை 31 தான் GST தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.