'அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரமில்லை': டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லியின் காற்று மாசுபாடு அரசியல் போராட்டமாக மாறிவிட கூடாது என்று இன்று கூறிய உச்சநீதிமன்றம், மூச்சுத் திணறும் காற்று மாசுபாடு "மக்கள் ஆரோக்கியத்தின் கொலைக்கு" காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பட்டாசு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி மனுதாரர்கள் தாக்கல் செய்திருந்த டெல்லி மாசுபாடு தொடர்பான மனுக்களை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அந்த விசாரணையின் போது, மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம், டெல்லி காற்று மாசுபாடு பிரச்சனையை அரசியல் பழிவாங்கலாக மாற்றுவது சரியில்லை என்று கூறியது. "இதுதான் காரணம், அதுதான் காரணம் என்று ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி பழி சொல்வதை தான் நம்மால் பார்க்க முடிகிறது." என்று நீதிபதி சுந்திரேஷ் கூறினார்.
பயிர் கழிவுகளை எரிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை
மேலும், ஒவ்வொரு குளிர்காலத்திலும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது டெல்லி காற்று மாசுபாட்டிற்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது. எனவே, பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. உத்திரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநில அரசுகளுடன் பயிர்கள் எரிப்பதை நிறுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்துமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. வெள்ளிக்கிழமை விசாரணையின் போது, டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய பங்காற்றிய வாகன மாசு குறித்தும் பரிசீலிக்க இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
'மாசுபாட்டை குறைப்பது தான் உங்களது வேலை': அரசாங்கத்தை சாடிய உச்ச நீதிமன்றம்
டெல்லி உள்ள நச்சுக் காற்றின் தரம் குறித்து இன்று கடுமையான கருத்துக்களைத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், காற்று மாசுவை சமாளிக்க அவசர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அரசியல் வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகளால் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்காமல் இருக்கிறது. "இது ஒரு அரசியல் போராக மாறக்கூடாது. இது மக்களது ஆரோக்கியத்தின் கொலை" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பயிர்கள் எரிப்பதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், "அதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது, அது உங்களது வேலை. ஆனால் அதை நிறுத்த வேண்டும். உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்." என்று கூறியுள்ளது.
டெல்லி அரசை கடுமையாக விமர்ச்சித்த உச்ச நீதிமன்றம்
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் டெல்லி அரசையும் கடுமையாக கண்டித்துள்ளது. "டெல்லி அரசும் பொறுப்பேற்க வேண்டும். டெல்லியில் பல பேருந்துகள் மாசுபடுத்தும் வகையில் பாதி கொள்ளளவில் இயங்குகின்றன. நீங்கள் இந்த பிரச்சனையை கவனிக்க வேண்டும்," என்று டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியில் மாசு அளவை குறைக்க டெல்லி அரசு அறிவித்த ஒற்றைப்படை-இரட்டைபடை திட்டம் குறித்தும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒற்றைப்படை-இரட்டைபடை திட்டம் என்பது ஒற்றைப்படை தேதிகளில் ஒற்றைப்படை எண்களை(பதிவு எண்) கொண்ட வாகனங்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்று கூறி டெல்லி அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தை விமர்சித்த உச்ச நீதிமன்றம், இது கேட்பதற்கு மட்டுமே நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளது.