Page Loader
சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
ஜூலை 14-ல் விண்ணில் செலுத்தப்படுகிறது சந்திராயன்-3

சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 08, 2023
10:18 am

செய்தி முன்னோட்டம்

கடந்த 2019-ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் சந்திராயன்-2 திட்டம் தோல்வியில் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட சந்திராயன்-3 திட்டமானது வரும் ஜூலை 14 அன்று செயல்படுத்தப்படவிருக்கிறது. இந்தத் திட்டத்தில், இந்தியாவின் சக்திவாய்ந்த லாஞ்ச் வெஹிக்கிள் மார்க்-III ராக்கெட்டின் மூலமாக சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது. சந்திராயன்-3 விண்கலமானது, லேண்டர் மாடியூல், ப்ரொபல்ஷன் மாடியூல் மற்றும் ரோவர் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இதில் ப்ரொபல்ஷன் மாடியூலானது, விண்கலத்தை நிலவுக்கு அருகில் எடுத்துச் செல்லும். லேண்டர் மாடியூலைக் கொண்டு, நிலவின் மேற்பரப்பில் மென் தரையிறக்கத்தை நிகழ்த்தவிருக்கிறது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து, ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியில் ஆய்வு உபகரணங்களைக் கொண்டு, நிலவின் மேற்பரப்பில் சில ஆய்வுகளைச் செய்யவிருக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

இஸ்ரோ

ராக்கெட் ஏவலைப் பார்வையிட, பார்வையாளர்களுக்கும் அனுமதி: 

ஜூலை 14 அன்று இந்திய நேரப்படி மதியும் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படவிருக்கிறது சந்திராயன்-3. அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 23 அன்று நிலவில் அந்த விண்கலத்தில் உள்ள லேண்டரானது தரையிறக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 23-ல் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், செப்டம்பர் மாதம் நிலவில் சந்திராயன்-3 தரையிறக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் ஏவலைப் பார்வையிட நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது இஸ்ரோ. விண்வெளி மையத்தில் உள்ள பார்வையாளர்களுக்கான இடத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவலை பார்வையிட விரும்புபவர்கள், lvg.shar.gov.in/VSCREGISTRATIO என்ற இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.