தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்
தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். இந்நிலையில் அவர் இன்று(அக்.,16) சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பின் பொழுது, ஆதித்யா, சந்திரயான் 3 விண்கலம் உள்ளிட்டவைகளின் வெற்றிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை சோம்நாத்துக்கு தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "இஸ்ரோவிற்கு தொடர்ந்து தமிழக முதல்வர் தெரிவித்து வரும் ஆதரவிற்கும், சந்திரயான் 3 வெற்றிக்கு அதில் பணிபுரிந்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடத்தியற்கும் நன்றி தெரிவிக்கவே இங்கு வந்தேன்" என்று கூறினார்.
2500 ஏக்கர் பரப்பளவு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பு
தொடர்ந்து பேசிய அவர், இந்த சந்திப்பின் பொழுது தமிழக முதல்வருக்கு சந்திரயான் மாதிரியினை பரிசாக வழங்கியதாகும் கூறியுள்ளார். மேலும் அவர், இஸ்ரோவின் மற்றொரு ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் அமையவுள்ளது. இதற்காக 2500 ஏக்கர் பரப்பளவு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது என்றும் தெரிவித்தார். அடுத்த 2 ஆண்டுகளில் அங்கு இஸ்ரோ தனது பணியினை மேற்கொள்ள தமிழக அரசு துணை நிற்கும் என்று முதல்வர் உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏவுதளம் அமையவுள்ள இடத்தினை சுற்றி பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். பல்வேறு துறைகளில் தமிழ்நாடு பெருமளவில் வளர்ச்சி பெற்று வருவது என்பது மிகுந்த மகிழ்ச்சியினை அளிப்பதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.