இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில் காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இன்று(நவ.,17) டெல்லியில் 2வது உலகளாவிய தெற்கு உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை காணொளி மூலம் துவக்கி வைத்த பிரதமர் மோடி, "கடந்த ஜனவரி மாதம் மாதம் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வளர்ந்து வரும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசப்பட்டது. அதன்படி இந்த 2ம் தெற்கு உச்சி மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது" என்று கூறினார். மேலும் அவர், "மேற்கு ஆசியாவில் நடக்கும் சம்பவங்கள் காரணமாக புதிய சவால்கள் ஏற்படுகிறது. உலக நன்மையினை கருதி தெற்கு நாடுகள் ஒற்றுமையுடன், ஒத்துழைப்பும் அளித்து செயல்பட வேண்டும்" என்று எடுத்துரைத்தார்.
'தெற்கு நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது' - மோடி
அதனை தொடர்ந்து பேசிய அவர், கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா ஏற்கனவே தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டு பேசினார். இந்த விஷயத்தில் நிதானத்தினை கடைபிடிப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, 'தற்போது நடக்கும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே நடக்கும் போரில் காசாவில் உள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்' என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதனிடையே, பாலஸ்தீனம் நாட்டின் அதிபருடன் பேசிய பிறகு மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன நாட்டிற்கு இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது என்றும், உலகளாவிய நன்மைக்காக தெற்கு நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இதுவாகும் என்றும் மோடி இந்த மாநாட்டில் பேசியுள்ளார்.