
இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு: அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஒரு சிறிய குண்டுவெடிப்பு நடந்ததது.
அந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
துக்ளக் சாலை காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த புதன்கிழமை, தேசிய பாதுகாப்புப் படை(என்எஸ்ஜி), என்ஐஏ மற்றும் டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு ஆகியவற்றின் குழு விசாரணைக்காக சம்பவ இடத்துக்கு சென்றன.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து இலைகள், செடிகள் மற்றும் மண்ணின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
குண்டுவெடிப்பின் தன்மை மற்றும் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் என்ன என்பதை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
டக்ஜ்க
சிசிடிவி கேமராவில் சிக்கிய இரண்டு சந்தேக நபர்கள்
குண்டுவெடிப்பு தொடர்பான அறிக்கையை டெல்லி காவல்துறையிடம் என்எஸ்ஜி விரைவில் சமர்ப்பிக்க இருக்கிறது.
கடந்த செவ்வாய்கிழமை மாலை 5:45 மணியளவில் சாணக்யபுரியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இருக்கும் நந்தா மாளிகைக்கு முன்னால் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், அந்த இடத்திற்கு அருகில் இஸ்ரேலிய தூதருக்கு எழுதப்பட்ட "துஷ்பிரயோகமான" கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் இரண்டு சந்தேக நபர்கள் சிக்கியதாகவும், அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.