LOADING...
கேரளாவில் பரபரப்பை கிளப்பிய 'இஸ்லாமிய நட்பு ஜிம்; இணையவாசிகள் கண்டனம்
கேரளாவில் பரபரப்பை கிளப்பிய 'இஸ்லாமிய நட்பு ஜிம்' (Representative Image)

கேரளாவில் பரபரப்பை கிளப்பிய 'இஸ்லாமிய நட்பு ஜிம்; இணையவாசிகள் கண்டனம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 04, 2026
03:41 pm

செய்தி முன்னோட்டம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஜிம், தங்களை "இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உகந்த ஜிம்" என்று விளம்பரப்படுத்தியதை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கடுமையான விவாதங்களும் சர்ச்சைகளும் வெடித்துள்ளன. பாலக்காடு மாவட்டம் புதுநகரம் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த ஜிம்மின் உரிமையாளரான நவாஸ் முத்து, தங்களது உடற்பயிற்சி கூடம் புதுப்பிக்கப்பட்டு புதிய வடிவில் திறக்கப்பட உள்ளதாகக் கூறி அண்மையில் ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டிருந்தார். சர்ச்சையான விளம்பரத்திற்கு உரிமையாளரின் விளக்கத்திற்குப் பிறகும் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த விவாதங்கள் ஓயவில்லை.

சர்ச்சை

சர்ச்சையைக் கிளப்பிய 'இஸ்லாமிய நட்பு' ஜிம் அறிவிப்பு

அந்த வீடியோவில் பேசிய உரிமையாளர் நவாஸ், "நாங்கள் கேரளாவிலேயே முதன்முறையாக இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உகந்த ஒரு ஜிம்மைத் தொடங்குகிறோம். இங்கு உடற்பயிற்சியின் போது சத்தமாக பாடல்கள் அல்லது இசை ஒலிக்கப்படாது. மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி நேரங்கள் மற்றும் பிரத்யேக உடற்பயிற்சி இடங்கள் ஒதுக்கப்படும். பயிற்சியாளர்களும் பாலின அடிப்படையில் பிரிக்கப்படுவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய உடனே, பலர் இதற்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். "கல்வியறிவில் சிறந்த கேரளா, 1000 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா?", "எல்லா இடங்களிலும் எதற்காக மதம் சார்ந்த பிரிவினைகளை உருவாக்க வேண்டும்?" என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். மேலும், இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான பிரத்யேக ஜிம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

விளக்கம்

விளக்கமளித்து புதிய வீடியோ வெளியிட்ட உரிமையாளர்

நெட்டிசன்களின் கடுமையான கண்டனங்களைத் தொடர்ந்து, நவாஸ் அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கிவிட்டு, ஒரு புதிய விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஜிம் முஸ்லிம்களுக்கு மட்டுமேயானது அல்ல என்றும், அனைத்து மதத்தினரும் இங்கு வந்து உடற்பயிற்சி செய்யலாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். "இது முஸ்லிம்களுக்கான ஜிம் என்று நான் எங்கும் கூறவில்லை. இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தீவிரமாகப் பின்பற்றும் பலர், பொதுவான ஜிம்களில் ஒளிரும் சத்தமான இசை மற்றும் ஆண்-பெண் இருபாலாரும் இணைந்து (Mixed Gym) பயிற்சி செய்யும் சூழல் காரணமாக உடற்பயிற்சி நிலையங்களுக்கு வருவதைத் தவிர்த்து விடுகின்றனர். எனது குடும்பத்தினரே இதனால் ஜிம்மிற்கு வருவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்காகவே இந்த மாற்று ஏற்பாடு" என்று நவாஸ் விளக்கமளித்துள்ளார்.

Advertisement